செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 மீதான கருத்துக்கள்
தமிழ்நாடு அரசு கடந்த சனிக்கிழமை செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு கொள்கையை வெளியிட்டது. மனித மாண்புகளுக்கும், சமத்துவத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வரையில் நாம் இவற்றை ஆதரிக்கிறோம்.
தமிழ்நாடு அரசு கடந்த சனிக்கிழமை (19.9.2020) செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு கொள்கையை, “தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020” என்ற தலைப்பில் வெளியிட்டது.
இக்கொள்கை ஆவணத்தின் மீது தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கடந்த திங்கட்கிழமையன்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவை கீழ்வருமாறு.
வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு துறையில் கவனம் செலுத்தி அதனை ஆக்கப்பூர்வமான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் வளர்த்தெடுக்க தமிழக அரசின் இந்த முன்னெடுப்பை நாம் முதலில் பாராட்டுகிறோம்.
செயற்கை நுண்ணறிவு என்றால் மனிதர்களின் நேரடி தினசரி தலையீடில்லாமல் தானாக பலவற்றை கற்றுணர்ந்து முடிவெடுக்கும் திறன் கொண்ட இயந்திரங்களை அதனை இயக்கும் மென்பொருட்களை இன்று குறிக்கிறது. இதனை அரசு மக்களுக்கு வழங்கும் இ-சேவைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுபோன்ற மென்பொருட்கள் திரைக்குப்பின் எப்படி வேலைசெய்கிறது, எப்படி முடிவுகளை எடுக்கிறது போன்ற விவரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், வடிவமைக்கும் போது அனைத்து விதமான முன்முடிவுகளிலிருந்தும் விடுபட்டு பல்வேறு சமூக காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் போன்றவற்றை இக்கொள்கை சரியாகவே வலியுறுத்துகிறது.
அவை செயல்படும் வழிமுறைகள் (algorithms) வெளிப்படையாக இருப்பதோடு, அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி நிரல்களும் வெளிப்படையாக ஓர் கட்டற்ற (அல்லது) திறந்த மூல மென்பொருள் உரிமங்களின் (FOSS Licenses) கீழ் வெளியிட வேண்டுமென்று நாம் வலியுறுத்துகிறோம்.
அரசு பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளில் முக்கிய முடிவுகளை இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் எடுக்குமேயானால், அவற்றின் இயக்கம் குறித்து எந்தவித ஐயம் ஏற்பட்டாமல் இருக்க அவற்றை கட்டற்ற மென்பொருளாக வெளியிடுவது அவசியம்.
செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அமல்படுத்தப்படுவதில் ஏதேனும் தவறு இருந்தாலோ, பிழைகள் இருந்தாலோ கட்டற்ற மென்பொருளாக இருக்கும் பட்சத்தில் எங்களைப்போன்ற பல தன்னார்வ அமைப்புகள் அவற்றை சுட்டிக்காட்டி அதன் மூலம் பொது மக்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்.
பொறிக்கற்றல் (Machine Learning) என்ற வழிமுறையே இன்று பொரும்பாளான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை உருவாக்கும் வழிமுறையாக உள்ளது. இவ்வழிமுறைக்கு தொடர்ந்து தகவல் மற்றும் தரவுகளை தீணிப்போட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
அப்படியெனில், மக்களின் மீதான தனிப்பட்ட தகவல்கள் பெருமளவு திரட்டப்படுமா? இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் அரசாலும், காவல்துறையாலும் மக்களுக்கெதிராகவும், மக்களை கண்கானிப்பு செய்யவும் பயன்படுத்தப்படுமா? போன்ற கேள்விகளை இக்கொள்கை தெளிவாக பேசவில்லை.
செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் முன்னர் அதனை பல்வேறு சமூக காரணிகளைக் கொண்டு பரிசோத்தித்து, மதிப்பீடு செய்ய TAM-DEF மற்றும் DEEP-MAX போன்ற சட்டகங்களை இக்கொள்கை முன்மொழிகிறது. அவ்வாறு செய்யப்படும் மதிப்பீடுகளை யாரும் மாற்றியமைக்காமல் இருக்க அதனை Blockchain trust network எனப்படும் ஒரு நம்பிக்கை இணையத்தில் பதிவேற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். அதே சமயம், Blockchain-ல் உள்ள proof-of-work எனப்படும் வழிமுறைக்கு அதீத கணக்கிடும் சக்தியும் (computing power), அதீத மின்சாரமும் தேவைப்படும் என்பதை இத்துறையில் பணிபுரியும் அனைவரும் அறிந்ததே! இவற்றால் வெளியிடப்படும் கார்ப்பன் (carbon footprint) அளவுகள் குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஏதேனும் விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. Blockchain போல் அதீத மின்சாரத்தை உரியாத, அதீத கணக்கிடும் சக்தி தேவைப்படாத குறைந்த கார்ப்பன் வெளியீட்டில் இயங்கும் பிற வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.
ஒட்டுமொத்தத்தில், நாம் அரசின் இந்த முன்னெடுப்பை பாராட்டும் அதே நேரத்தில் மனித மாண்புகளுக்கும், சமத்துவத்திற்கும் அதே நேரத்தில் சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வரையில் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை இச்செயல்பாடுகளை ஆதரிக்கிறது.