தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் உறுப்பினர்களின் நேர்காணல்

Siragu.com என்ற தமிழ் தளத்திற்கு அளித்த நேர்காணல். சிறகு.காம் தளத்தில் படிக்க


கேள்வி: தமிழில் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

பதில்: முதலில் தமிழ் மென்பொருள் உருவாக்கவேண்டும் என்ற நோக்கோடு இதை ஆரம்பிக்க வில்லை. நாங்கள் ஆரம்பித்தது அறிவு தனிவுடைமையாக இருக்கக்கூடாது, அறிவு பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 2008-ல் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தோம். அப்படி நாங்கள் செய்துகொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு என்ன புரிய ஆரம்பித்தது என்றால், கணினி அறிவியல் மட்டுமே ஒரு பெரிய தடை கிடையாது, ஆனால் தமிழில் கணினி அறிவியல் இல்லாததுதான் கணினியோ, அது சார்ந்த தொழில் நுட்பங்களோ மேலே போவதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்பது மாதிரி பார்த்தோம். மிகவும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ATM Machine ல் ஆங்கிலம் இருக்கிற வரைக்கும் அது பெரிய அளவில் போகவில்லை. அதன் பிறகு எப்பொழுது தமிழில் வந்ததோ அதன் பிறகுதான், ATM பயன்பாடு என்பது பெரிய அளவில் உருவாகியது. இதை புரிந்துகொண்டதற்குப் பிறகுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழில் மிக முக்கியமான சில மென்பொருட்கள் உருவாக்கவேண்டும் என்பது. இந்த விடயத்தை நாங்கள் ஆரம்பித்தது அல்ல, இதற்கு முன்பு பலபேர் செய்திருக்கிறார்கள்.

தமிழை localization என்று சொல்வார்கள், தன்மொழியாக்கம் என்று சொல்வார்கள். அதை நிறையபேர் செய்திருக்கிறார்கள். தமிழில் முக்கியமான ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதேமாதிரி Unicode-க்காக நிறையபேர் சண்டை போட்டிருக்கிறார்கள். இதில் நிறையபேர் போராட்டம் செய்திருக்கிறார்கள், இது நீண்ட நெடிய போராட்டம், இதில் எங்களுடைய பங்கும் இருந்திருக்கிறது. அதனால் தமிழில் குறிப்பாக இலவசமாக மென்பொருட்கள் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருந்திருக்கிறது.

கேள்வி: தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?

பதில்: கட்டற்ற என்றால் என்ன என்ற கேள்வி, பலபேருக்கு விசித்திரமானதாக இருக்கலாம், இதை ஆங்கிலத்தில் எப்படி வைத்திருந்தார்கள் என்றால் Free Software என்று வைத்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Free Software என்றால் Freedom Software என்று நிறையபேர் புரிந்துகொண்டார்கள். ஆனால் தமிழில் அதை மொழிபெயர்த்தீர்கள் என்றால் இலவச மென்பொருள் என்று வந்துவிடும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது இலவச மென்பொருள் இல்லை, கட்டற்ற மென்பொருள். கட்டற்ற என்றால் கட்டுப்பாடுகள் அற்ற அதாவது ஒருவர் ஒரு மென்பொருளை வைத்து என்ன செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அதாவது படிக்கவேண்டும் என்று நினைத்தால் படிக்கலாம், அதை இன்னொருவருக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் கொடுக்கலாம், அதை மேம்படுத்தவேண்டும் என்று நினைத்தால் மேம்படுத்தலாம், இப்படி அவர் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த விசயங்கள் எல்லாவற்றையும் செய்யமுடிவதுதான் கட்டற்ற மென்பொருள். இந்த கட்டற்ற மென்பொருள் சம்பந்தமாக உலக அளவில் விவாதமே நடந்துகொண்டிருக்கிறது.

கேள்வி: கட்டற்ற அறிவு என்றால் என்ன?

பதில்: கட்டற்ற அறிவு என்று பார்த்தீர்கள் என்றால் கட்டற்ற மென்பொருள் என்பது மென்பொருள் சம்பந்தமான விடயங்கள் கட்டற்றதாக இருக்கிறது. திடீரென்று ஒரு ஊரில் பாம்பு கடித்தால் இறந்துவிடுகிறார்கள், ஆடு கடித்தால் இறக்கவில்லை என்பது எப்படி தெரிகிறது, ஏனென்றால் பாம்பு கடித்து நிறையபேர் இறந்திருப்பார்கள், அதை இன்னொருவர் பார்த்திருப்பார். எனவே அறிவு என்பது பொதுப்படையான ஒரு விசயம். பழநெடுங்காலமாக மனிதன் வழிவழியாக அவனுக்கென்று ஒரு அறிவு வந்திருக்கும், ஆக அறிவு என்பது தனிவுடைமை கிடையாது, அது பொதுவுடைமை.

பத்து வருடங்களுக்கு முன்னால் Encyclopedia அல்லது கலைச்சொல் அகராதி அந்த மாதிரி விசயங்களை யோசித்தீர்கள் என்றால் ஆங்கிலத்தில் Encyclopedia Britannicaஎன்று இருந்தது. அதைத் தவிர்த்து வேறு எதுவும் கிடையாது. அவர்களிடம் தான் நீங்கள் சென்று வாங்கவேண்டும், அது மிகவும் விலை அதிகம். விலை அதிகம் என்பது மட்டுமல்ல, எல்லாராலும் மாற்றமுடியாது அந்த மாதிரியான விசயங்கள். விக்கிபீடியாவைப் பார்த்தீர்கள் என்றால் அதில் ஒரு மிகப்பெரிய விசயம் என்றால் எல்லோரும் அதில் பங்களிக்க முடியும், அப்படி ஒரு சூழல். விக்கிபீடியாவில் ரவி என்று ஒருவர் இருக்கிறார், அவர் என்ன சொல்வார் என்றால் புலி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அதை மிருகக்காட்சி சாலையில் வைத்து வளர்த்தால் வளராது. புலியும் வளரவேண்டும், அதை சுற்றியிருக்கிற காடும் வளரவேண்டும், மான் நன்றாக வளரவேண்டும், அது ஒரு சுற்றுச்சூழல். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற அறிவு என்பது தனியாக இருப்பது கிடையாது, அதை சுற்றி எல்லாமே இருக்கவேண்டும். அதில் அது வளரவேண்டும் என்பதுதான் கட்டற்ற அறிவு என்பது.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என்னுடைய பெயர் சுதிர், எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமம், நான் படித்தது எல்லாமே கிராமத்தில் இருக்கிற அரசு பள்ளியில்தான். அதன்பிறகு மதுரையில் ஒரு பள்ளியில் எனது படிப்பைத் தொடர்ந்தேன். அதன் பிறகு BSc இளங்கலை படித்தேன். அதன் பிறகு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் MSc IT படித்தேன். இந்த கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையுடன் என்னுடைய தொடர்பு என்று பார்த்தீர்கள் என்றால் 2012க்குப் பிறகு என்னுடைய பங்களிப்பு இந்த அறக்கட்டளையில் இருக்கிறது.

கேள்வி: ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இக்கால சூழலில் தமிழ் மென்பொருளை தற்காலத் தமிழ் மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: இந்தக் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நான் பேசும் பொழுது எனது அறிமுகத்திலேயே சொன்னேன். நான் கிராமத்திலிருந்து வந்த படித்திருக்கக்கூடிய ஒரு இளைஞன். மென்பொருளை பயன்படுத்துவதற்கு ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் எல்லோருக்கும் இருக்கவேண்டியதில்லை. ஆங்கிலம் எல்லோரும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் கிராமத்திலிருந்து வரக்கூடிய, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் அரசுப் பள்ளியிலும், தமிழில் படித்துவரக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இதுவரையிலும் கணினி அறிவியலில் ஆங்கிலம் படித்தவர்களால்தான் நிறைய வேலைகள் செய்ய முடியும். எங்களை மாதிரி ஆட்கள் உள்ளே வரும்பொழுது தேவை அதிகரித்துள்ளது. தமிழில் மென்பொருள் இருந்தால் மட்டும்தான் எங்களால் பயன்படுத்த முடியும் என்ற கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எங்களை மாதிரியான ஆட்கள் இன்னும் கூடுதலாக இதில் பங்களிப்பு செய்யும் பொழுது, இதை பயன்படுத்துபவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கும், அது கண்டிப்பாக நடக்கும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய சொந்த அனுபவம், என்னைப் போன்ற நிறைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லோரும் கிராமத்திலிருந்து வந்து படித்துவிட்டு புதுமையான விசயங்களை எப்படி கற்றுக்கொள்வது, தான் கற்றுக்கொண்ட மொழிகளில் எந்த மென் பொருளும் இல்லையென்றால் அவர்களால் கற்றுக்கொள்வது கடினம். இது கண்டிப்பாக வளரும்.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என் பெயர் அருண் பிரகாஷ், எனது சொந்த ஊர் இராமநாதபுரம், FSFTN Free Software Foundation Tamil Nadu-ல் 8 வருடங்களாக இருக்கிறேன். MTechபடித்திருக்கிறேன். ஆரம்பத்தில் இந்த அமைப்பு வளர் நிலையில் இருந்தது. போதுமான மக்கள் இருக்க மாட்டார்கள். அப்பொழுதுதான் IIT-யிலிருந்து ஒருகுழு வந்து வந்தார்கள். FSFTN-ன் கூட்டம் பார்த்தீர்கள் என்றால் ஆங்கிலத்தில்தான் எல்லாமே இருக்கும். மின்னஞ்சல் கூட தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. அந்த மாதிரியான நிலைகள்தான் இருந்தது. ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் இயங்குகிறது, தமிழ் பேசாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அதிகபட்சம் தமிழில்தான் இயங்குகிறது.

கேள்வி: இதுவரை என்னென்ன தமிழ் மென்பொருட்களை உருவாக்கியுள்ளீர்கள்?, தமிழ் மென் பொருள் உருவாக்கத்தில் தங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: ஒரு மென்பொருள் தமிழில் வருவதை தமிழ் மென்பொருள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். நான் ஒரு மென்பொருள் உருவாக்குகிறேன் என்பதுதான் இன்று எல்லோருமே சொல்லிக்கொண்டிருப்பது. போதுமான ஆய்வு இல்லை, எனக்கு அங்கீகாரம் இல்லை எல்லாமே தான் ஒரு தனி நபராக முன்னேற்றப்படவேண்டும், தான் வந்து தனியான தீர்வு தரவேண்டும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த கட்டற்ற மென்பொருளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு குழுவாக செயல்படுகிற ஒரு விசயம். எனக்கு ஒரு விசயம் பிடித்திருக்கிறது, எனவே அந்த விசயத்தை செய்யவேண்டும் என்றால் தனியாக செய்யமுடியாது, எந்த ஒரு விசயமாக இருந்தாலும் தனியாக செய்ய முடியாது. நானே தனியாக செய்யவேண்டும் என்றாலும்கூட கணினி என்ற ஒன்றை இன்னொருவர் செய்துதான் கொடுக்க வேண்டும், அதில்தான் நான் வேலைசெய்ய ஆரம்பிக்க வேண்டும். கட்டற்ற மென்பொருளைப் பார்த்தீர்கள் என்றால் குழுவாக செயல்படுவதுதான் நோக்கம். அது இல்லாமல் கட்டற்ற மென்பொருள் கிடையாது.

முழு நேர்காணலை படிக்க...