On Bitcoin, Crypto-Currencies & Blockchain
வரலாற்றில் பணம் பல்வேறு வடிவங்களில் மாறி வந்துள்ளது. செம்பு, பித்தலை, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் நாணயங்களாகவும், காகித தாள் வடிவிலும் தற்போது புழகத்தில் உள்ளது. மன்னர்கள் தங்கள் ஆட்சி சின்னம் பொறித்த நாணயங்களை வர்த்தகத்திற்கு வெளியிட்டது முதல் இன்று அனைத்து நாடுகளிலும் மத்திய வங்கிகள் (ரிசர்வ் வங்கி) பணத்தை அச்சிட்டு புழகத்திற்கு விடுகிறது.
மத்திய வங்கிகள் நேரடியாக பணத்தை பொதுமக்களுக்கு விநியோகிப்பது இல்லை. பொதுமக்களுக்கும் மத்திய வங்கிகளுக்கும் இடையில் இடைதரகர்களாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் மூலம் தான் பணம் பொதுமக்களின் கைகளுக்கு வருகிறது.
அரசு வெளியிடும் பணத்தை நாம் எந்த தயக்கமுமின்றி வாங்கிக் கொள்கிறோம். ஏனெனில் இதில் அரசின் உறுதி இருக்கிறது. இந்த ரூபாயில் குறிப்பிட்டுள்ள பரிவர்த்தனை மதிப்பிற்கு ஈடான பொருட்களை இப்பணத்தைக் கொடுத்து சந்தையில் நாம் வாங்கிக்கொள்ளலாம். அரசு என்னும் கட்டமைப்பு எங்கும் காணாமல் போய்விடாது என்ற நம்பிக்கை இதில் உள்ளது. எனவே அனைவரும் அரசு வெளியிடும் பணத்தை தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் நடைமுறையில் எந்தவொரு ரூபாய் நோட்டையும் ஒரே இரவில் செல்லாக் காசாக்க அரசால் முடியும் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
கடந்த நவம்பர் 2016ல் பிரதமர் தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி 500 மற்றும் 1000 ரூபாய் காகித தாள்கள் செல்லாது என்று அறிவித்ததையும் அதன் பின் அதனை மாற்ற நீண்ட நெடிய வரிசையில் மக்கள் காத்துக்கிடந்ததும், இவ்வாறு காத்துக்கிடந்து நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்ததையும், ATM-களில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டதும் என மக்கள் அனுபவித்த துயரங்கள் சொல்லில் அடங்காதவை.
அடுத்து நாம் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதற்காக நாம் வங்கிகளில் வைப்பு வைக்கிறோம். வங்கிகள் இதில் ஒரு பகுதியை கையிருப்பாக (reserve) ஒதுக்கி வைத்துவிட்டு, மீதத்தை வட்டிக்கு கடன்களாக வழங்கி அதிலிருந்து வரும் வரவில் மிகச் சிறிய பகுதியை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு மீதத்தை வங்கி செயல்பாட்டு செலவு போக தங்களுடைய லாபமாக எடுத்துக்கொள்வார்கள்.
நாம் வங்கியில் போட்ட பணத்தை நமக்கு தேவை ஏற்படும்போது மீண்டும் எடுத்துக்கொள்ளலாம் என்ற வங்கியின் வாக்குறுதியை நம்பிதான் வங்கியை நாடுகிறோம். ஆனால் வங்கிகள் அவற்றை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கின்றன. கடன்களாக கொடுத்த பணம் திரும்பிவராவிட்டால்? வங்கிகளில் ஆயிரம் கோடிகளில் கடன்களை பெற்றுவிட்டு நாட்டைவிட்டு ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
"எனவே பணத்தை அரசு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே எனது நோக்கம். அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் இந்த பிட்காயின் என்னும் க்ரிப்டோ நாணயம்" என 2009-ல் பிட்காயினை துவக்கிவைத்து அறிவித்தார் சத்தோஷி நாக்கமோட்டோ. சத்தோஷி ஒரு ஜப்பானிய புனைப்பெயர். இந்த பெயருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
க்ரிப்டோ நாணயத்தில் உள்ள க்ரிப்டோ எனும் வார்த்தை ஒரு தகவலை படித்தாலும் புரியாத ஒரு வடிவத்திற்கு மாற்றும் ஒரு அறிவியல் முறையான க்ரிப்டோக்ராஃபியை (cryptography) குறிக்கிறது. அனுப்புவோருக்கும், பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
இரண்டு நபர்களுக்குள் ஒரு பணப்பரிவர்த்தனை நடக்கிறது என்றால், அதில் யாராவது ஒருவர் ஏமாற்றக் கூடும். கொடுக்காத பணத்தை கொடுத்துவிட்டதாக ஒருவரும், பெற்ற பணத்தை பெறவில்லை என்று மற்றொருவரும் கூறக்கூடும். இதை தவிர்க்கவே இடையில் வங்கிகள் ஒவ்வொருவரின் கணக்கிலும் வரவு செலவு கணக்கை லெட்ஜர் என்னும் வடிவில் பராமரிக்கிறது. இருவரில் யாரேனும் ஒருவர் ஏமாற்றினாலும் வங்கிகளின் இந்த லெட்ஜர் காட்டிக்கொடுத்துவிடும்.
வங்கிகள் போன்ற இடைதரகர்கள் இல்லையென்றால் பிட்காயின் போன்ற க்ரிப்டோ நாணயத்தில் இந்த லெட்ஜரை யார் பராமரிப்பார்கள்? இதுபோன்ற தவறுகளை எப்படி தவிர்ப்பது என்ற கேள்விக்கான பதிலே சத்தோஷி நாக்கமோட்டோவின் பரவலாக்கப்பட்ட லெட்ஜர் (Distributed Ledger) தொழில்நுட்பம். மனிதர்களையும், நிறுவனங்களையும் தூக்கி எறிந்துவிட்டு அவ்விடத்தில் இணையம் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்படும் பல்வேறு கணினிகள் மூலம் இப்பிரச்சனையை தீர்க்க முடியும் என்று அவர் முன்மொழிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததே இந்த "ப்ளாக்செயின்" (Blockchain) எனப்படும் இந்த தகவல் தொடர் சங்கிலி. க்ரிப்டோ நாணயங்களில் பரவலாக்கப்பட்ட லெட்ஜ்ர் என்று நாம் கூறும்போது ப்ளாக்செயினை தான் நாம் கூறுகிறோம்.
க்ரிப்டோ நாணயம் என்பது உலோகத்தாலோ, காகிதத்தாலோ உருவாகும் நாணயமல்ல. அதை தொட்டு உணரமுடியாது. கணினியிலோ, கைபேசியிலோ சேமிக்கப்படும் ஒரு எண் அவ்வளவே. இந்த ப்ளாக்செயின் இணையத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு பிட்காயினை உருவாக்க முடியும். ஆனால் அதற்கு தீவிர ஆற்றல் கொண்ட கணினிகள் வேண்டும். ஒரு க்ரிப்டோ நாணயத்தை உருவாக்க நடக்கும் இந்த முயற்சியின் பெயர் தான் மைனிங்க் (mining), அதாவது தோண்டுதல்.
பிட்காயினின் ப்ளாக்செயினை துவக்கிவிட்ட சத்தோஷி 50 பிட்காயின்களை உருவாக்கினார். இந்த ப்ளாக்செயினில் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பங்குபெறும் எந்தக் கணினி சரிபார்க்கிறதோ அவர்களுக்கு சன்மானமாக ஒரு பிட்காயின் கிடைக்கும். இதுதான் பிட்காயினின் மைனிங்க். மொத்தமாக 2 கோடியே 10 லட்சம் பிட்காயின்கள் தான் உருவாக்க முடியும் என அதன் துவக்கத்திலேயே அதன் மென்பொருள் நிரலில் நிர்ணயம் செய்துவிட்டார் சத்தோஷி. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை மொத்தம் 1 கோடியே 89 லட்சம் பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.
பிட்காயின் போன்றொரு திட்டம் சமூகத்தில் வேர்விட்டு வளரவேண்டுமென்றால் அதன் அறிவியல் தொழில்நுட்பம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும்படி இருக்க வேண்டும். எனவே இவை அனைத்தும் கட்டற்ற மென்பொருளாகவே வெளியிடப்பட்டது. சத்தோஷி நினைத்தாற்போல் அது பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களிடையே வேகமாக பரவத் தொடங்கியது. ஆனால் அவர் எதிர்பார்த்த நோக்கத்திற்காக அல்ல மாறாக அதற்கு எதிரான திசையில்.
அவரது நோக்கம் என்ன என்பதை ஒருமுறை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
- அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுபாடற்ற ஒரு மாற்று நாணயம் புழகத்திற்கு வரவேண்டும்.
- இடைதரகர்களை நீக்கிவிட்டு மக்கள் தங்களுக்குள் பரிவரத்தனை மேற்கொள்ள வேண்டும்.
- இதில் பங்குபெறுபவர்களின் அடையாளங்கள் யாருக்கும் தெரியாது.
இந்த நோக்கங்கள் எவ்வாறு நிறைவேறவில்லை என்று பார்ப்போம்.
இன்று பிட்காயின் போன்ற க்ரிப்டோ நாணயத்தை வைத்திருப்பவர்கள், அதை வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பணத்தை யாரும் பதுக்கி வைத்துக்கொள்ள மாட்டோம் தானே? அதாவது உங்களிடம் 1 ரூபாய் இருந்தால் அதை பதுக்கிவைத்து என்ன பயன்? நாளையும் அது 1 ரூபாய் தான் நாளை மறுநாளும் அது 1 ரூபாய் தான், எனவே தேவைக்கு செலவு செய்வோம். பொருட்கள் அல்லது சேவைகளை பெற பணத்தை பரிவத்தனை செய்துக்கொள்வோம். ஆனால் பிட்காயின் போன்ற நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதை செலவு செய்வதில்லை மாறாக அதனை அப்படியே வைத்து காத்திருந்து அந்த நாணயத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறார்கள். ஆம், இது பணமாக பயன்படுத்தப்படுவதை விட ஒரு தங்கம், வைரம் போன்ற ஒரு சொத்தாக பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி ஒரு பிட்காயின் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 29 லட்சம். இரண்டு வாரங்களுக்கு முன்னால் 32 லட்சமாக இருந்தது. இப்போது புரிகிறதா பிட்காயின் போன்ற நாணயங்கள் பங்கு சந்தையில் பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்ப்பது போல பயன்படுத்தப்படுகிறது. பங்குச் சந்தையிலாவது சமூகத்திற்கு தேவைப்படும் பொருட்களை/சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பங்குகள் கைமாறுகின்றன. க்ரிப்டோ நாணய சந்தையில் அதுகூட எதுவும் கிடையாது. இது கைமாறிக்கொண்டே இருக்கும் ஒருநாள் இது மதிப்பற்று போகும், அப்படியாகும் போது யாரிடம் பிட்காயின் உள்ளதோ அவர்களின் நிலை பரிதாபத்திற்குறியது.
சில நாடுகள் பிட்காயின் போன்ற க்ரிப்டோ நாணயங்களை முற்றிலுமாக தடைசெய்துள்ளன. சில நாடுகளில் இவற்றின் பயன்பாடு அரசின் வரைமுறைக்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசு க்ரிப்டோ நாணையங்களை வாங்கி விற்று லாபம் பார்ப்பவர்களுக்கு லாபத்தில் 30% வரி விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் இதனை தொடர்ந்து தடைசெய்ய வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே முதல் நோக்கமான மாற்று நாணையம் தோல்வியடைந்திருக்கிறது. பணத்தின் மீதான தங்கள் அதிகாரத்தை எந்த அரசும் இழக்க விரும்பாது. எனவே அரசை மீறி ஒரு நாட்டில் அவ்வளவு எளிதாக ஒரு மாற்று நாணையம் புழக்கத்திற்கு வந்துவிடாது. இதை மிக நன்றாகவே சத்தோஷி அறிந்திருப்பார்.
இரண்டாவது நோக்கத்திற்கு வருவோம். 1 பிட்காயின் இன்று 29 லட்சம் என்றே வைத்துக்கொள்வோம், இதை வைத்திருப்பவர்கள் யாரிடமிருந்து 29 லட்சத்தை பெற்றுக்கொள்வார்கள்? இங்கு தான் அனைத்து நாடுகளிலும் இடைத்தரகர்கள் தோன்றிவிட்டார்கள். க்ரிப்டோ நாணையத்தை பெற்றுக்கொண்டு அதற்கு ஈடான பணத்தைக் கொடுக்கும் க்ரிப்டோ பரிமாற்றங்கள் (crypto exchanges) உருவாகி செயல்படுகின்றன.
இவ்வாறு செயல்படும் பல பரிமாற்ற நிறுவனங்கள் இதில் பங்குபெறுவோரின் தகவல்களை பெற்றுக்கொண்டே பங்குபெற அனுமதிக்கிறார்கள், அதுமட்டுமல்ல பங்குபெறுவோரின் வாலட் (wallet) இந்நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை நிச்சயம் சத்தோஷி ஏற்றுக்கொள்ளமாட்டார். எப்படி வங்கிகள் ஒருவரின் வங்கிக் கணக்கை முடக்கமுடியுமோ அதுபோல் இந்த இடைதரக நிறுவங்களும் ஒருவரின் வாலட்டை முடக்க முடியும்.
எனவே சத்தோஷியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நோக்கங்கங்களும் தோல்வியுற்றதாக நான் கருதுகிறேன். பிட்காயின் மட்டுமே க்ரிப்டோ நாணையம் கிடையாது. இதைப்போல் ஆயிரம் க்ரிப்டோ நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொன்றின் நோக்கமும் வெவ்வேறாக இருக்கிறது. உதாரணத்திற்கு "ரிப்பிள்" என்னும் க்ரிப்டோ நாணயத்தை எடுத்துக்கொண்டால் அதை உருவாக்குபவர்கள் அதனை சர்வதேச பணபரிமாற்றத்திறாக பயன்படுத்தக்கூடிய ஒரு பரவலாக்கப்பட்ட லெட்ஜராக உபயோகிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. எனவே அதன் மதிப்பு கிட்டத்தட்ட 1 டாலரின் மதிப்பிற்கு ஈடாக இருக்கிறது.
இதுபோல் ஈத்ரியம், சொலேனா என அடுக்கிக்கொண்டே போகலாம். எதுவாயினும் சத்தோஷியின் அடிப்படை நோக்கங்கள் தோல்வியில் முடிவடைந்ததாக நான் தற்போது கருதுகிறேன். அரசுகள் மற்றும் வங்கிகள் க்ரிப்டோ நாணயங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதன் முதுகெலும்பான ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மீது பேரார்வம் கொண்டுள்ளது.
எந்த அரசை இல்லாமல் செய்யவேண்டும் என்று சத்தோஷி விரும்பினாரோ அதே அரசுகளும், நிறுவனங்களும் தற்போது ப்ளாக்செயினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கக்கூடிய ஒன்றாக மாற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. தமிழக அரசு முதல் சர்வதேச நிதி ஆணையம் வரை எவ்வாறு ப்ளாக்செயினை பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
இறுதியாக,
வர்க்க முரண்பாட்டல் தோன்றிய அரசு என்னும் இயந்திரத்தை, வர்க்க்ப் போராட்டம் மூலம் எதிர்க்கொள்ளாமல், வாலட் போராட்டம் மூலம் தூக்கியெறிய முடியாது
என்பதைக் கூறி முடித்துக்கொள்கிறேன்.