சோஷியல் நெட்வொர்க் - பகுதி 1
சில ஆண்டுகளுக்கு இவற்றைப் பயன்படுத்திய பிறகு தான் நாம் அனைவரும் ஒன்றை உணரத் தொடங்குகிறோம். அது என்னவெனில் ...
நம் தினசரி வாழ்க்கையில் சமூக வலைதளங்களின் தாக்கங்கள் எப்படி இருக்கின்றன? அவை ஏன் நம்மீது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? இத்தாக்கங்கள் எப்படிப்பட்டவை? தனி மனித வாழ்க்கையிலும், சமூகத்திலும் இவைகளின் தாக்கம் பெருமளவு நன்மைகளை விளைவிக்கின்றனவா, இல்லை தீங்குகள் விளைவிக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு பதில் தேட முயற்சிக்கலாம்.
நாம் தகவல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நொடியில் லட்சக்கணக்கான தகவல்களை கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் உருவாக்கி இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறோம். அரசியல் விமர்சனங்கள், கேளிக்கைகள் (மீம்ஸ்), திரை விமர்சனங்கள், வாழ்வின் நிகழ்வுகள், என்று ஏராளமாக குவிந்துக் கிடக்கின்றன இவைகள்.
பெரும்பாலும் தமிழ்ச் சமூகம் மற்ற சமூக வலைதளங்களைக் காட்டிலும் Facebook, Youtube மற்றும் Whatsapp-ஐ தான் அதிகம் பயன்படுத்துகிறது. இதில் சமீபத்திய புதிய வரவு Instagram. இதில் Facebook, Whatsapp மற்றும் Instagram மூன்றுமே Facebook Inc. என்னும் ஒரே நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களை பறிமாறிக் கொள்வது என்பது முதன் முதலில் மனிதன் தோன்றியதிலிருந்தே நடைபெற்று வருகிறது, ஆனால் இன்று நாம் இருக்கும் காலம் என்பது அதன் விஸ்வரூப காலம் எனலாம். இன்னும் ஏராளமான மக்கள் திரள் கல்வியறிவு பெற்று இணைய பயன்பாட்டிற்குள் வரும் பொழுது இது மேலும் அதிகரிக்கும். குறிப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளிடம் இணையத்திற்குள் அவர்கள் காலடி எடுத்து வைக்கும் வயது வரம்பு இன்னும் குறையும். எடுத்துக் காட்டாக நான் முதன்முதலாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பொழுது எனக்கு வயது 20. ஆனால் எனக்கு அடுத்த தலைமுறையினர் பள்ளிப் பருவத்திலிருந்தே பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு இவற்றைப் பயன்படுத்திய பிறகு தான் நாம் அனைவரும் ஒன்றை உணரத் தொடங்குகிறோம். அது என்னவெனில், நம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சமூக வலைதளங்களில் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் தகவல்களை விரல் நுணியில் நகர்த்தி நகர்த்தி, மூளைக்குள் தகவல்களை செலுத்தி, ஸ்மார்ட்போன்களின் திரைவெளிச்சத்தால் தூக்கமிழந்தவர்களையும் பார்க்க முடிகிறது. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்" என்ற வாசகத்தை பெற்ற தமிழ்ச் சமூகம் கூட ஏன் அளவில்லாமல் தகவல் நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகிப் போனது?
உடனுக்குடன் என்று ஒருபுறம் தகவல்களை கொண்டு சேர்த்தாலும், இப்படி உடனுக்குடன் நம்மிடம் கொண்டுவரப்படும் தகவல்கள் அனைத்தும் நம் வாழ்விற்கு அர்த்தம் சேர்ப்பதுதானா? இல்லை வணிக நோக்கத்திற்காகவும், நுகர்வு வெறி கலாச்சாரத்திற்கு தூண்டுகோல் போல தகவல் நுகர்வு கலாச்சாரம் செயல்படுகிறதா? அப்படி அது செயல்படுகிறது என்றால் மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்கும் சமூக வலைதளம் என்று மட்டும் Facebook, Youtube போன்றவற்றை இனியும் நாம் கருத முடியுமா? இல்லை இவை விளம்பரதாரர்களின் சந்தையாக மாற்றப்பட்டுள்ளதை தான் நாம் ஏற்காமல் மறுக்க முடியுமா?
அப்படியெனில் நம் நேரத்தை இப்படி திருடுவதில் யாருக்கேனும் உள்நோக்கம் இருக்கின்றனவா? அப்படி இருந்தாலும் அதனை எவ்வாறு நம் ஒப்புதல் இல்லாமல் அவர்களால் திருட முடிகிறது? நாம் தானே நாம் என்ன செய்கிறோம் என்று தீர்மானிக்கிறோம்? பிறகு எப்படி பிறர் மீது பழிபோடுவது என்று கேட்டீர்களானால், அதற்கான பதில் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் இருந்து துவங்குகிறது.
நாம் பயன்படுத்தும் Facebook, Youtube போன்றவற்றின் நிறம், வடிவம், ஆகியவை ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? அதனை இவ்வாறு வடிவமைத்தவர்களின் நோக்கம் என்ன? இந்த தகவலுக்கு அடுத்த எந்த தகவல் வரப்போகிறது என்று தீர்மானிக்கும் மென்பொருளின் நிரல் (software code) அதனை எப்படி தீர்மானிக்கிறது என்று ஏன் நமக்கு தெரிவிக்கப்படுவதில்லை? ஏன் ஒரு சில தகவல்களுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப் படுகிறது? ஏனெனில் அவர்கள் அதற்கு பணம் செலுத்தினார்கள் என்பதற்காகவா? அப்படியெனில் பணம் செலுத்த முடிகிறவர்களின் கருத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா சமூக வலைதளங்கள்? சமூகத்தில் ஏற்கனவே நிலவும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தான் இதுபோன்ற சமூக வலைதளங்களின் மென்பொருளிலும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனவா?
"அதுதான் நடக்கிறது, அதுவும் திட்டமிட்டே நடக்கிறது. ஸ்மார்ட்போன் திரையில் நீங்கள் ஒவ்வொரு முறையும் விரல் வைக்கும் போது, உங்கள் விரல்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மூளையை தங்களின் கட்டுபாட்டில் வைக்க என்ன என்ன உக்திகள் எல்லாம் கையாளப் படுகிறது, நிறுவனங்கள் பொருளாதார இலாபத்திற்காக இவற்றை அரங்கேற்றி, நாம் நவீன அடிமைகளாக மாற்றப்படுகிறோம்."
என்று போட்டுடைக்கிறார் கூகுளில் மென்பொருள் வடிவமைப்பாளராக செயல்பட்டு வெளியேறிய டிரிஸ்டன் ஹேரிஸ்.
நம்மால் இந்த மென்பொருட்கள் செயல்படும் விதிகளை மாற்ற இயலுமா? யாருக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் அனைவரின் தகவல்களையும் சமமாக நடத்த இயலுமா? சமூக வலைதளங்களின் நோக்கத்தை சமூக வலைதளங்களாகவே வைத்திருக்க இயலுமா? சமூக வலைதளங்களை வெறுப்பு விதைக்கும் இடமாக இல்லாமலும் அதே நேரத்தில் நம் நேரத்தை திருடுவதாகவும் இல்லாமல் கட்டமைக்க முடியுமா? போன்ற கேள்விகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.