தமிழக மக்களின் தகவல் கசிவு. பொறுப்பற்ற தமிழக சுகாதாரத்துறை.
தனிநபர் தகவல்களுக்கென கள்ளச் சந்தையே இணையத்தில் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திவிட்டு இரண்டாம் தவணை செலுத்த தவறிய 1.5 கோடி நபர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களது வலைதளத்தில் பொதுவில் வெளியிட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது.
இதனை தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தற்போது அது வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், எத்தனைபேர் அதை அவர்கள் கணினியில் நகலெடுத்து வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. தனிநபர் தகவல்களுக்கென கள்ளச் சந்தையே இணையத்தில் இயங்கி வருகிறது.

தனிநபர்களின் தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் கசிவதும், திருடப்படுவதாலும் பல்வேறு சைபர் மோசடிகளுக்கு பலரும் ஆளாகின்றனர்.
அரசுத்துறையே இப்படி தவறு செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதோடு அதனை தினசரி செய்தி நாளிதழில் வெளியிட்டு அறிவிப்பது தகவல்களை திருட காத்திருக்கும் சைபர் குற்றவாளிகளுக்கு பூட்டிய வீட்டின் சாவி இங்கு தான் இருக்கிறது என்று விளம்பரப்பட்டுத்துவது போன்றது.
சைபர் குற்றவாளிகள் மட்டுமல்ல, தேர்தலில் வாக்களிக்கும் மக்களை குறிவைத்து "மைக்ரோ டார்க்கெட்டிங்" எனப்படும் வழிமுறைகளை பயன்படுத்தி அவர்களின் கைபேசிக்கு வாட்சப், குறுஞ்செய்தி மூலம் செய்திகளை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்துவது இன்று அரங்கேறும் சூழலில், தமிழக அரசு சுகாதாரத்துறை இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்டிருக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியினர் தொகுதிவாரியாக வாக்களார்களின் கைபேசி எண்களுக்கு குறுச்செய்தி அனுப்பியதும், அவர்களிடம் எவ்வாறு வாக்களர்களின் கைபேசி எண்கள் கிடைத்தது என்று கேள்வியெழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களின் தரவுகளை எவ்வாறு பொறுப்புடன் கையாள வேண்டும் என்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.