ஆதார் சம்பந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பு - இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கம் (FSMI) அறிக்கை

ஆதார் சம்பந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பு - இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கம் (FSMI) அறிக்கை

அனைவருக்கும் வணக்கம்,

செப்டம்பர் 26 அன்று உச்சநீதிமன்றம் ஆதார் திட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வழக்கில், 4:1 என்ற விகிதத்தில் ஆதார் திட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது. ஆதார் திட்டத்திலிருந்த சில அப்பட்டமான வழிகேடுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதை இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Movement of India - FSMI) வழிமொழிகிறது என்றாலும், சில முக்கியப் பிரச்சனைகள் இன்னும் முறையாகக் கவனிக்கப்படவில்லை.

தொடக்கத்திலிருந்தே FSMI மற்றும் அதன் துணை இயக்கங்கள், தகவல் திருட்டு, கண்காணிப்பு போன்ற ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஆதார் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது. கடந்த சில வருடங்களில் ஆதார் இல்லாமையால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிகழ்வுகளும், அதனால் நேர்ந்த சில இறப்புகளும், மிகப்பெரும் தகவல் கசிவு சம்பவங்களும் எங்கள் ஐயங்களை உறுதி செய்தன.

ஆதார் சட்டத்தின் 57ஆம் பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால், ஆதாரை தனியார் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு, ஏற்கெனவே ஏர்டெல் நிறுவனம் செய்தது போன்ற சிக்கல்கள் ஏற்படுவதற்கானக் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பிரிவு சட்டவிரோதமானது என்ற தீர்ப்பினால் ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட ஆதார் தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் அழித்துவிடுவதை அரசாங்கம் உறுதி செய்யத் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை சேகரித்து வந்ததும், ஆதார் தகவலை சமர்ப்பிக்காவிட்டால் தங்களின் சேவைகள் முடக்கப்படும் என்று அச்சுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு திரட்டப்பட்ட ஆதார் தகவல்கள் முறையாக அழிக்கப்படுவதை உறுதி செய்ய அரசு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

மேலும் இத்திட்டத்தினால் பல்வேறு புறக்கணிப்புகள் அரங்கேறி இருப்பினும், பல்வேறு சேவைகளின் மீது ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால் பெரும்பான்மை மக்கள் அவதிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பினும், அரசின் உத்திரவாதங்களுக்கு உச்சநீதிமன்றம் செவிசாய்த்து ஆதார் திட்டத்தை அங்கீகரித்தும், ஆதார் திட்டம் செல்லுபடியாகும் என்பதற்கு பெரும்பான்மை சாதகத்துடன் அளிக்கப்பட்ட உத்தரவும் வருத்தமளிக்கிறது. ஆதாரின் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக புறக்கணிப்புக்கு உள்ளானோருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருப்பது உதாசீனப்படுத்தும் நோக்கில் இருக்கிறது. மேலும், அவ்வாறான புறக்கணிப்புகளைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெரும்பான்மை வலுவுடன் வழங்கட்ட இந்தத் தீர்ப்பு, ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றியதை அங்கீகரிக்கும் விதமாக உள்ளது. ஆதாருக்கு எதிராக நீதிபதி D.Y. சந்திரச்சுட் வழங்கியத் தீர்ப்பில், இவ்வாறு மக்களாட்சியை அவமதிக்கும் விதமாக ராஜ்ய சபாவை புறக்கணித்து நிறைவேற்றப்படும் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டது மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இறுதியாக, தனியுரிமை மற்றும் கண்காணிப்புப் பார்வைகளில் தொலைநோக்கான பார்வையைக் கொள்ளாமல் UIDAIயின் வாதங்களை ஏற்றுப் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நீதிபதி சந்திரச்சுட் கூறியவாறு,

"ரேகை, இமை போன்ற பையோமெட்ரிக் தகவல்கள் அடையாள அமைப்புகளில் மிக முக்கியமானது. மக்கள் தங்களின் இனம், நிறம், மொழி போன்ற பாகுபாடுகளால் துன்புறுத்தப்பட்டதற்கு இவ்வாறான அடையாள அமைப்புகள் அடிப்படையாக அமைந்ததாக வரலாற்றில் பல முன்னுதாரணங்கள் உள்ளன.".

ஏற்கெனவே நடந்த தகவல் கசிவுகளின் தாக்கங்கள் பற்றியோ, இனிமேல் நடக்கவும் அனைத்து சாத்தியங்களும் இருப்பது பற்றியோ நீதிமன்றம் பொருட்படுத்தாதது, நாட்டின் குடிமக்களுக்கு தீமையே பயக்கும். இத்தகைய தீர்ப்பு வந்திருந்தாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வெகுஜன கண்காணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும். இந்தப் போராட்டத்தை தொடர்வதும், இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கும், ஆதார் திட்டத்தையே முழுமையாகத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவதும் ஒவ்வொரு சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கடமையாகும்.

இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கம் மற்றும் நாடு முழுதுமுள்ள அதன் துணை இயக்கங்களுக்கு இந்தத் தீர்ப்பு இத்திட்டத்தின் பின்னாலுள்ள சிக்கல்களில் எந்தத் தீர்மானமான முடிவையும் தாராது. அரசு, ஆதார் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாவரும் என்றும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடப்பதை உறுதி செய்வது அனைவருக்கும் தலையாய பணியாக இருக்கும். கூடவே, மக்களிடையே தங்களின் தனியுரிமை குறித்த விழிப்புணர்வை விரிவுப் படுத்துவதும், இவற்றில் ஏதேனும் உரிமை மீறல்கள் நடந்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் நம் அனைவரின் தலையாயக் கடமை. இன்னும் ஆதார் திட்டத்தில் பல முரண்பாடுகள் வெளிக்கொணராமல் இருக்கிறது, அவற்றை அம்பலப்படுத்துவதிலும் இந்திய மென்பொருள் இயக்கம் என்றும் முன்நிற்கும்.

இப்படிக்கு,
இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கம் (FSMI)

தமிழ் மொழிபெயர்ப்பு - ஆமீர் (FSFTN)