ஹீரோ திரைப்படத்தைப் பற்றி ஒரு Analysis
கல்வி முறை, முதலாளித்துவத்தின் லாபத்திற்க்கான அறிவு திருட்டு, Patents, Intellectual Property மற்றும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் போராடும் குணம்.
அந்த மாணவியின் கண்டுபிடிப்பை ஏன் இந்த சமூகம் ஏற்கவில்லை?
முதலாளித்துவம் அனைத்தையும் லாபத்தின் கண்ணோட்டத்தில் தான் பார்க்கும். அதற்கு தேவை திறமை இல்லை, சுரண்டலும் லாபமும் தான். அந்த மாணவியின் கண்டுபிடிப்பு மக்களுக்கு தெரியவந்தால் அவர்கள் அதை அங்கீகரிப்பார்கள். முதலாலிகளால் லாபம் பார்க்க முடியாது. எனவே சமூகத்தில் ஒரு போலி பிம்பத்தை வளர்த்து அவர்களில் சிந்திக்கும் திறனை துடைத்தெறிவதுதான் அவர்களின் வேலையாக இருந்தது. அதை நாம் இன்றும் பார்க்க முடிகிறது.
அறிவை திருட முடியுமா? அவரவர் கண்டுபிடிப்பது அவரவருக்கு தானே?
அறிவு என்பது சமூகத்தில் இருந்து பிறக்கிறது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும், அதனால் ஏற்ப்படும் தாக்கங்களும் தான் புதிய மாற்று சிந்தனைக்கு வித்திடுகிறது. ஆகவே அறிவை யாரும் திருட முடியாது, அதை பொதுவுடைமையில் வைக்க வேண்டும். இதை தான் நாம் Knowledge Commons என்கிறோம். ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை. முதலாளித்துவம் தனது செல்வ பலத்தை பயன்படுத்தி, பொதுவில் உருவாகும் அறிவுசார் கண்டுபிடிப்புகளை தன் வசம் ஈர்க்கிறது. பின் மக்களை அதற்க்காக உழைக்க வைத்து சுரண்டுகிறது. இதை தான் FSFTN போன்ற அமைப்புகள் கட்டற்ற மென்பொருள் மூலம், மக்களுக்கான தொழில்நுட்பம் மூலம் முதலாளித்துவத்தையும் தனியுடைமையையும் எதிர்க்கிறது. அறிவுசார் பொதுவுடைமை தான் இதற்க்கு மாற்று.
யார் ஹீரோ?
அநீதி நடக்கிறது. மக்கள் சுரண்டப்படுகிறார்கள். அனைத்தும் Commodity ஆக்கப்படுகிறது. இவை அனைத்தையும் பார்த்தும் அனுபவித்தும் சும்மா போக முடியுமா? தன்னால் முடிந்தவற்றை செய்வது ஒரு புறம். ஒன்று சேர்வதும், ஒருங்கிணைப்பதும் தான் சமூகத்தின் ஐடியாவிற்கு விதையாக அமைகிறது.
ஐடியா அழிக்கமுடியாதவையாக எப்போது மாறுகிறது என்றால் அது மக்களிடம் செயல்படுத்தும்போது தான். சிலையை உடைத்துவிடலாம் ஆனால் சித்தாந்தத்தை அழிக்க முடியாது, எப்படி என்றால் அது மக்களிடம் வேரூன்றி இருக்கிறது.
ஒரு ஐடியாவை, மாற்று சித்தாந்தை, மக்களுக்கான அரசியலை விதைக்கும் ஒவ்வொருவனும் ஹீரோ தான்.
முகமூடி எதற்கு?
தனி ஒரு மனிதன் இந்த அடக்குமுறையையும் சுரண்டலையும் அநீதியையும் எதிர்த்து போராடும் போது, அவனுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவன் யார் என்று அவன் எதிரிகளுக்கு தெரிய வந்தால் அது அவனுக்கு மட்டுமல்ல அவன் குடும்பத்திற்க்கும் ஆபத்து. ஏனெனில் அவன் தனியாக இருக்கிறான். அவன் ஐடியா தனியாக இருக்கிறது. அவன் ஒரு அமைப்பாக ஒன்றுபடும் போது ஒரு முகமூடி அவனுக்கு தேவைப்படாது. அந்த அமைப்பு தான் அவனுக்கு முகமூடி, அந்த அமைப்பு தான் அவனுக்கு பாதுகாப்பு.
இந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே இதை பற்றி எழுதவேண்டும் என தோன்றியது. இன்றைய கல்வி முறை எப்படிப்பட்டவையாக இருக்கிறது. முதலாளித்துத்தின் கோர பசியில் மாணவர்கள் எப்படி பலிவாங்கப்படுகின்றனர் என்பது புரியும்.
Ideas are Bulletproof என்று V for Vendetta-ல் கூறுவதும், ஐடியாக்களை அழிக்க முடியாது என்று இப்படத்தில் கூறுவதும் சரிதான், ஆனால் ஒருங்கிணைப்பு, அமைப்பாக்குதல், போராட்டம், விதைத்தல் இவை இல்லாமல் ஐடியாக்கள் கனவுகளே!
இறுதியில் மார்க்ஸ் கூறுவது போல, இப்படத்தில் வரும் MRS நிறுவன முதலாளி வில்லன் அல்ல, வில்லனாக பார்க்கப்பட வேண்டியவன் அல்ல. அவனே முதலாளித்துவத்தின் ஆளுருவம்!