வேண்டாம் அரட்டை, தேவை கருத்துச் சுதந்திரம்
சோஹோ (ZOHO) நிறுவனம் உருவாக்கிய அரட்டை (Arattai) செயலி வாட்சப் (WhatsApp) செயலிக்கு சரியான மாற்றா?
சோஹோ (ZOHO) நிறுவனம் உருவாக்கிய அரட்டை (Arattai) செயலி வாட்சப் (WhatsApp) செயலிக்கு சரியான மாற்றா?
இது முழுவதும் உள்நாட்டு தயாரிப்பு, சர்வர்கள் இந்தியாவில் உள்ளது எனவே இதனை அனைத்து இந்தியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது மட்டுமே ஒரு சரியான மாற்று காரணியாக இருந்துவிட முடியுமா? அரட்டை ஏன் ஒரு சரியான மாற்று இல்லை என்ற காரணங்களை பார்ப்போம்.
முதல் காரணம்: அரட்டை செயலியில் E2E (End-to-End) Encryption எனப்படும் பாதுகாப்பு முறை அமல்படுத்தவில்லை. இதன் பொருள், நாம் பரிமாறிக்கொள்ளும் செய்திகள் வெளிப்படையாக கடத்தப்படுகிறது. அதாவது இரண்டு நபர்கள் என்ன தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதை இடையில் உள்ள சோஹோ நிறுவனம் சேமித்து கண்காக்கிறது. நாளை அரட்டையின் சர்வர்களுக்குள் சமூக விரோதிகள் புகுந்தால் நம் அனைவரின் தரவுகளும் அவர்கள் கையில். வாட்சப் மற்றும் சிக்னல் செயலிகளில் E2E பாதுகாப்பு முறை அமுலில் உள்ளது.
இரண்டாவது காரணம்: அரட்டை செயலி, வாட்சப் செயலியைப் போலவே ஒரு கருப்புப் பெட்டி. அதாவது, இச்செயலியின் உள்ளே என்ன இருக்கிறது, எப்படி செயல்படுகிறது என்று அந்நிறுவனத்தை தவிர வேறும் யாருக்கும் தெரியாது. இதன் பொருள், நாளையே இதில் எ2எ பாதுகாப்பு முறை அமல்படுத்தப் பட்டது என்று அவர்கள் தெரிவிதால், அதை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. இது ஆபத்தானது. சிக்னல் செயலி அதுபோல் இல்லை, அது கட்டற்ற மென்பொருள் வகையைச் சேர்ந்தது. கண்ணாடிப் பெட்டியைப் போன்றது, எனவே அதன் நிரலை யாவரும் கண்டறியலாம்.
மூன்றாவது காரணம்: வாட்சப், சிக்னல் செயலிகளைப் போலவே, அரட்டை செயலியும் ஒற்றை நிறுவனத்தின் கட்டுப்பாடில் இயங்கக் கூடிய சேவை. இதன் பொருள், இதனை பயன்படுத்தும் அனைவரும் அந்நிறுவனங்களின் சர்வர்களை மட்டுமே எப்போதும் சார்ந்திருக்கும் படி உள்ளது. சர்வர்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அனைத்து அதிகாரத்தையும் அவர்களிடம் குவித்துக் கொள்ளும் போக்கு உருவாகிறது.
நான்காவது காரணம்: அரட்டை சேவையின் பயனர் தரவுகள் குறித்த தனியுரிமைக் கொள்கை சார்ந்தது. "அரசு எங்களிடம் ஒருவரைப் பற்றி தகவல் கேட்டால் சட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் அதனை உடனே அவர்களுக்கு உடனே வழங்கிவிடுவோம்" என்று கூறுகிறது. சட்டத்திற்கு உட்படுவது சரியாக தோன்றலாம், ஆனால் இது போன்ற சட்டங்கள் மூலமாகத் தான் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இச்சட்டங்கள் ஜனநாயகத்திற்கு கேடானவை.
பயனர்களின் தனியுரிமையை முன்னிலைப் படுத்தாமல், அடிபணிவது ஆரோக்கியமான போக்கல்ல. ஒன்றிய அரசு, வாட்சப் சேவையையும் இதே நெருக்கடிக்கு தள்ளிய போது, மெட்டா நிறுவனம் இதனை எதிர்த்து இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அரசின் இந்த போக்கு மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று வாதிடுகிறது.
சிக்னல் செயலியை பொருத்த வரை, அரசு ஒரு பயனரின் தகவலை கேட்டு நிர்பந்தித்தால், அவர்களிடம் உங்கள் பயனர் பெயர் மற்றும் கைபேசி எண்னைத் தவிர கொடுக்க ஒன்றும் இருக்காது. ஆனால் வாட்சப் அப்படியல்ல, அது ஒரு கருப்பு பெட்டி என்பதால் அவர்கள் கூறும் அனைத்தையும் நம்ப முடியாது.
ஒருவேளை, பயனர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நாங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவே E2E பாதுகாப்பு முறையை உடைக்க வேண்டும் என்று எங்களுக்கு அரசு அழுத்தம் கொடுத்தால், பயனர்களை காட்டிக் கொடுப்பத்தற்கு பதிலாக எங்கள் சேவையை அந்நாடிலிருந்து திரும்பெறுவதே மேல் என்ற முடிவெடுப்போம் என சிக்னலின் தலைவர் மெரிடித் கூறுகிறார்.
இதையெல்லாம் சோஹோ நிறுவனம் செய்யுமா?
- அரட்டை செயலியை கருப்புப் பெட்டியிலிருந்து கண்ணாடிப் பெட்டியாக அந்நிறுவனம் மாற்றுமா?
- சமூக விரோதிகளிடமிருந்தும், அரசின் கொடுங் கண்காணிப்பிலிருந்தும் பயனர்களின், அதாவது, இந்திய மக்களின், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்குமா அல்லது காவுகொடுக்குமா?
- இவர்களின் சர்வர்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றுமா? பயனர்கள் விருப்பப் பட்டால் தங்களுக்கான சர்வர்களை தாங்கே இயக்கிக் கொள்ள வழிவகை செய்யுமா?
அரட்டை, வாட்சப்பை விட, சிக்னல் பாதுகாப்பனது, வெளிப்படையானது, நம்பகத்தன்மைக் கொண்டது.
காரணங்களை சீர்தூக்கி பார்த்து, நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.