பேசும் புகைப்படங்கள் - கவனம்

நாம் புதிதாக பல மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் எல்லோருடனும் நாம் நெருங்கிப் பழகுவதில்லை. ஏனெனில் சிலர் நம் நம்பிக்கையைச் சம்பாத்திக்கிறார்கள். அப்படி நம்பிக்கை வராதவர்களிடம் நாம் சற்று கவனமாகவே பேசுகிறோம். அவர்களோடு எந்த செய்தி அல்லது தகவல்களை பகிர்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். இதை தான் ஆங்கிலத்தில் Privacy என்று அழைக்கிறோம். Privacy-யும் Secrecy-யும் வேறு வேறானவை. Secrecy (இரகசியம்) என்பது தகவலைப் பற்றியது, ஆனால் Privacy என்பது தகவல் அல்லது செய்தியின் வெளியீட்டு உரிமை பற்றியது.

Let's take a Selfie புள்ள...

என்று எங்கும் எதிலும் தாமி (selfie) மயமாகியிருக்கும் இச்சூழலில் நாம் Privacy குறித்து நிச்சயம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஏன் என்று ஒரு செய்முறை விளக்கமாகவே பார்த்துவிடுவோம். நாம் தாமி அல்லது புகைப்படம் எடுக்க இன்று smartphones, webcams மற்றும் DSR/DLSR போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகம் பயன்படுத்துகிறோம். இச்சாதனங்களை இயக்குவது அதனுள் இருக்கும் மென்பொருட்கள் தான். இந்த மென்பொருட்களின் ஓர் அங்கமாக இருப்பது EXIF (EXchangeable Image file Format) Writer / Reader என்னும் ஒரு பகுதி.

ஒரு புகைப்படத்தின் அளவு என்ன, எடுத்த சாதனத்தின் பெயர், தேதி, நேரம், ஒருவேளை சாதனத்தில் இடம் காட்டும் கருவி (GPS) இருந்து அதுவும் செயற்பாட்டில் உள்ளது என்றால் அந்த இடத்தை குறிக்கும் குறியீடுகள் (coordinates), Flash வந்ததா? இல்லையா? போன்ற பல்வேறு தகவல்களை சேகரித்து EXIF வடிவத்தில் புகைப்படத்தோடு இணைத்து விடுகின்றன இந்த மென்பொருட்கள். நாம் ஒரு புகைப்படம் எடுக்கிறோம் என்று தான் நினைக்கிறோம். ஆனால் இவற்றுள் பல தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். நீங்களாகவே முயற்சித்துப் பாருங்கள், இந்த பக்கத்திற்கு சென்று ஒரு தாமி எடுத்து இதில் போட்டு பாருங்கள் https://prashere.gitlab.io/exifdata/.

undefined என்று வருமாயின் நல்லது, ஏனெனில் அத்தகவல்கள் புகைப்படத்தில் இல்லை. மாறாக மேலே நாம் கூறிய தகவல்கள் வருமாயின் அங்கே தான் பிரச்சனை உள்ளது. EXIF metadata இருப்பது பிரச்சனை என்று நான் கூறவில்லை, மாறாக நமக்கே தெரியவில்லை நம்முடைய சாதனங்கள் இதுபோன்ற நம்முடைய தகவல்களை வெளியிடுகிறது என்று. இதை நம் அறியாமை என்று கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் இவையாவும் இச்சாதனத்தை உருவாக்கும் போது அதன் மென்பொருளில் சேர்க்கப்படுகிறது, நாம் இவற்றை கோரவில்லை. மென்பொருளும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இதன் அர்த்தம், நம் சாதனமே இந்த மென்பொருளின் கட்டுப்பாட்டில் உள்ளது, அதாவது நேரடியாக இல்லாமல் இச்சாதனம் மறைமுகமாக மென்பொருளை உருவாக்குபவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே பொருள். அதனால் தான் நாம் தனியுடைமை (proprietary software) மென்பொருட்களை புறந்தள்ளி, கட்டற்ற (Free(dom) Software) மென்பொருட்களை பயன்படுத்தச் சொல்கிறோம்.

சரி, இந்த புகைப்பத்திலிருந்து உங்களால் என்ன தெரிந்துக் கொள்ள முடியும்? ஒரு மின் விசிறி சுழன்றுக் கொண்டிருக்கிறது. வேறு என்ன தெரிந்துக் கொள்ள முடியும்?

இந்த மின் விசிறி எந்த இடத்தில் (GPS Latitude, GPS Longitude), எந்த நேரத்தில், எந்த சாதனத்தால் எடுக்கபட்டது போன்ற விபரங்கள் கூட தெளிவாக இருக்கிறது. எனில் இந்த சாதனம் யாருடையதோ அவரும் அந்த நேரத்தில் அங்கு இருந்திருகிறார் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது. இதை பகிரும் போது நான் மின் விசிறியைத் தான் காட்ட விரும்பினேனே தவிர இன்னபிற தகவல்களை அல்ல! நாம் இதுபோல் எடுக்கும் பல தாமி மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்கள், மெசெஞ்சர் என்று பலருக்கும் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு இதை Facebook-ல் பதிவேற்றம் செய்தால் என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

இத்தகவல்கள் Facebook சர்வரிலும் சேமிக்கப்படுகிறது. சர்வரில் நம்முடைய தகவல்கள் முழுமையாக அகற்றப்படுகிறது என்று கூட நம்மால் உறுதிபடுத்த முடியாது. இப்படிதான் நம்முடைய Privacy நம்முடைய ஒப்புதல் இல்லாமலே பறிபோகிறது.

இவற்றை தடுக்க தற்போது உள்ள ஒரே வழி, EXIF metadata-க்களை அழித்துவிட்டு பிறகு பதிவேற்றம் செய்வது தான். குனு/லினக்ஸ் பயன்படுத்துவோர் MAT - Metadata Anonymisation Toolkit என்னும் இந்த கட்டற்ற மென்பொருளை நிறுவி பயன்படுத்தலாம். பயனர் சுதந்திரம், Privacy போன்றவற்றில் Proprietary மென்பொருட்களை நாடுவது அதன் நோக்கத்தையே தகர்த்துவிடும், எனவே EXIF தகவல்களை நீக்குவதற்கும் Proprietary மென்பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

வரும் சனவரி மாதம் 26, 27, 28 மற்றும் 29, 2017 சென்னையில் Free Software Movement of India-வினுடைய 2வது தேசிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. 4CCon என்று பெயரிடப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் Privacy, Commons, Software Freedom, Community Networks, Programming போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், ஆராய்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள் என்று பலரும் கலந்துகொள்கிறார்கள். நீங்களும் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறோம். நண்பர்களுக்கும் பரிந்துக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு: https://4ccon.fsmi.in