தேடுபொறி அறிமுகம் - சுதந்திரமாக தேடுங்கள்
இணைய, வலை பயனர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் இருந்து வருகிறது. கூகுள் அல்லாத பிற தேடுபொறி தளங்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு bing, duckduckgo, qwant போன்ற தளங்கள். ஆயினும் கூகுள் போன்ற பல தேடுபொறி தளங்களை நாம் பயன்படுத்தும் போது நம் தனியுரிமையை (Privacy) இழக்க நேரிடுகிறது. கூகுளில் sign-in செய்து தேடுகையில் நாமே நாம் தான் என்று நம்மை அடையாளப்படுத்தி விடுகிறோம். அப்படி sign-in செய்யாமல் தேடினால் நாம் பயன்படுத்தும் கணினி (அல்லது) ஸ்மார்ட்ஃபோனில் சில குறியீடுகளை உள்ளிட்டு, நம்முடைய இணைய முகவரி (IP address) மூலம் நம்மை அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள், இது போல் பல உக்திகளை கூகுள் போன்ற நிறுவனம் அமல்படுத்துகிறது.
இது போல் அடையாளப் படுத்துவதன் கேடுகள் பற்றி இணையத்தில் பல நாடுகளில் பல ஜனநாயக அமைப்புகள் போதுமான அளவிற்கு ஏற்கனவே பேசியுள்ளனர். கூகுள் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்து வெளியேறிய முன்னாள் ஊழியர்கள் கூட பேசுகின்றனர். ஒட்டுமொத்த மக்களைப் பற்றிய விவரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்களை விரல்விட்டு எண்ணக்கூடிய, லாபத்திற்காக இயங்கக்கூடிய ஓரிரு நிறுவனங்கள் கைகளில் மையப்படுத்தப்படுவது நம்மை நாமே பலவீனப்படுத்திக் கொள்ளும் போக்கு. இவை தான் Cambridge Analytica போன்ற நிறுவனங்கள் மக்களை ஆன்லைனில் மூலைச் சலவை செய்து தேர்தல் முடிவுகளை அவர்கள் தேவைக்கேற்ப மாற்றும் அளவிற்கு இட்டுச்சென்றுள்ளது. இது ஒரு உதாரணம் தான்.
இவற்றை இரண்டு வழிகளில் நாம் கையாள வேண்டும். ஒன்று, இது போன்ற வணிக நிறுவனங்கள் மக்களை முட்டாளாக்காமல் பாதுகாக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஐரோப்பாவில், Right to be Forgotten, GDPR போன்ற சட்டங்கள் போல. இரண்டாவது, பயனர்களாகிய நம்மிடமிருந்து துவங்க வேண்டிய மாற்றங்கள்.
இந்த இரண்டாவது வகையில் தான் நாங்கள் இங்கே அறிமுகப்படுத்தும், தேடுபொறி தளம். இது உண்மையில் ஒரு தேடுபொறி இல்லை. ஆனால் மேலே கூறிய பல தேடுபொறிகளில் நம் சார்ப்பாக தேடி, பதில்களை சேகரித்து நமக்கு வழங்கும். இதை தான் Meta தேடுபொறி என்கிறார்கள். அப்படி ஒரு மெட்டா தேடுபொறி தான் searX. இது ஒரு கட்டற்ற மென்பொருள் வகையான மெட்டா தேடுபொறி. இது எப்படி இயங்குகிறது என்பது கண்ணாடி பெட்டி போல வெளிப்படையாக இருக்கும் எனவே மறைமுகமாக பயனர்களை உளவு பார்க்க ஏதும் இல்லை என்பது புலப்படும்.
கட்டற்ற மென்பொருள் தமிழ்நாடு (FSFTN) சார்பில் நாங்கள் இதை https://search.fsftn.org என்ற முகவரியில் இயக்கி வருகிறோம். இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். கவலையின்றி சுதந்திரமாக தேடுங்கள். இதேபோல் புதுவையில் இயங்கி வரும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினரும் மற்றொரு முகவரியான https://search.fshm.in ல் இயக்கி வருகிறார்கள். இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இது எப்படி நம்மைப் பாதுகாக்கிறது என்றால், நாம் நேரடியாக கூகுள், பிங் போன்ற தளத்திற்கு செல்லாமல், நம் மெட்டா தேடுபொறி தளத்திற்கு சென்று தேடுவோம். நாம் உள்ளிடும் தேடல் வார்த்தையை பிற தேடுதளத்திற்கு அனுப்பி, பதில்களை நமக்கு மீண்டும் வழங்குகிறது. கூகுள் போன்ற தேடுபொறிக்கும் இடையில் உள்ள இந்த மெட்டா தேடுபொறியின் பெயரும் முகவரியும் தான் தெரியும், நம் சாதனத்தைப் பற்றியோ, முகவரி பற்றியோ எதுவும் தெரியாது. ஒரே தளத்திலிருந்து பலரும் தேடும் போது கூகுளின் மறைக்கப்பட்ட மென்பொருட்களால் ஒரு தனிநபரை அடையளாப்படுத்த முடியாமல் குழம்பும்.
இந்த மெட்டா தேடுபொறியை இயக்கும் எவரும் கூகுள் செய்யும் அதே வேளையை செய்ய முடியும். அதாவது இடையில் அமர்ந்து பயனர்களின் தேடல்களையும், முகவரியையும் பதிய முடியும். கட்டற்ற மென்பொருள் இயக்கம் சார்ப்பாக நாங்கள் இதனைச் செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்க மட்டும் தான் முடியும். இதற்கு உண்மையான தீர்வு YaCy போன்ற peer-to-peer முறையிலான தேடுபொறிக்கு மாறுவது மட்டுமே. அதுவரையில் இதுபோன்ற மெட்டா தேடுபொறிகளை பயன்படுத்திக் கொள்வோம்.
இந்த மெட்டா தேடுபொறியை உங்கள் வலை உலாவிகளில் (Web-browser) இயல்பான (default) தேடுபொறியாகவும் வைக்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் முகவரியை உள்ளிட்டு தேடுவதை தவிர்க்கலாம்.
Firefox உலாவியில் இயல்பான தேடுபொறியாக அமைக்க ...
Chromium சார்ந்த உலாவியில் இயல்பானதேடுபொறியாக அமைக்க ...
https://search.fsftn.org?q=%s
குறிப்பு: FSFTN நன்கொடைகள் மூலம் இயங்குகிறது. இது போன்ற சேவைகளுக்காண சர்வர்களை இயக்க மாதம் ரூ. 350/- வரை செலவாகிறது. எனவே உங்களால் முடிந்த நன்கொடையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. FSFTN Bank Account Details
Image Credit: Photo by Anthony Martino on Unsplash